இன்னும் 90 வருடங்களில் உலகின் பெருமளவு நிலப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக திரு. ராபர்ட் சவான் தெரிவிக்கிறார்.
ராபர்ட் சவான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். 33 வயது முடியும் தருணத்தில் இவர் உலகையே காலால் நடந்து கடந்த மனிதர் என்ற புகழுக்குரியவர்.
இவர் சொல்வது என்ன?
இலண்டனை இருப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு டாக்சி டிரைவர். இவர் சுற்றுச்சூழல் ஆர்வம் காரணமாக பல வேலைகளைச் செய்து பொருளீட்டி தனது ஆராய்ச்சிக்காக செலவிட்டுக் கொண்டுள்ளார்.
ஆர்வம் காரணமாக ஒரு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் சேர்ந்து வாடகைக்கு ஒரு கப்பலை எடுத்து 1500 மைல்கள் கடலில் பயணம் மேற்கொண்டு வெற்றியுடன் அண்டார்டிகாவை அடைந்துவிட்டார். அப்போது இவருடைய நண்பர்கள் இருவர் மட்டுமே இவரோடு இருந்துள்ளனர்.
அண்டார்ட்டிகா பயணம் செய்தபோதுதான் இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது இவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
இதன் காரணம் என்னவென்று ஆய்ந்தபோது தான் ஒரு திடுக்கிடும் தகவல் இவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. அதாவது, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய கதிர்களால் தான் இவர்களின் கண்கள் நிறமிகளை இழந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.
காரணம் என்ன?
துருவப் பயணத்தின் போது தான் கண்டவற்றை நமக்கு பகிர்கிறார் இவர். மிக வேகமாக பணியாறுகள் உருகிவருவதாகவும்.. இதனால் கடல் மட்டம் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், இதை கண்கூடாக தானே நேரில் கண்டதற்கான ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளை இவர் விவரிக்கிறார். இவற்றிற்கெல்லாம் காரணம் உலக வெப்பமயமாதல் தான் என்று ஆணித்தரமாக கூறுகிறார்கள் இவர்கள்.
இந்நிலையில் வளர்ந்த நாடுகளுடன், வளரும் நாடுகளும் சேர்ந்து இத்தகைய வெப்ப மயமாதலை செய்துவிடக் கூடாதென எச்சரிக்கிறார்.
நாம் எரிக்கும் எரிசக்தி தான் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்றும், மிக விரைவாக துருவ பனி உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து பெருமளவு நிலம் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும் என்றும், இன்னும் 90 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், கூடிய விரைவில் உலக அழிவுக்கு நாமே காரணமாக இருந்துவிடுவோம் என்றும் தெரிவிக்கிறார் ராபர்ட் சவான்
தவிர்ப்பது எப்படி?
இத்தகைய பேரழிவிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை அவரே தெரிவிக்கிறார்..
- அதாவது பெட்ரோலிய, மற்றும் நிலக்கரி சம்பந்தமான ( கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடும் பொருட்களை) எரிபொருளைக் கைவிட்டு அதற்கு மாற்றாக சூரிய எரி சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
- இதனால் ஓரளவுக்கு இத்தகைய சூழலை வருமுன் தவிர்த்து விடலாம் என்றும் கூறுகிறார்.
- மேலும், தனது துருவ ஆராய்ச்சிகளை விட்டு விட்டு இத்தகைய பிரச்சாரங்களை தற்பொழுது முழுமூச்சாக செய்து வருகிறார் ராபர்ட் சவான்.
சுற்றுச்சூழலை காப்போம்..! வருங்கால சந்ததியினரை வளமுடன் வாழ வைப்போம்..!!