Saturday, 12 November 2011

கேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை-அரசு

சென்னை: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களிடம் இருந்து ரூ.70க்கு மேல் மாதக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பதிவு செய்து அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களாக தொழில் செய்து வரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனைவரும் தங்களுடைய சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்த மூன்று மாத முன் பணம் மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான சந்தா தொகையை விரைவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சந்தாதாரர்களிடமிருந்து வசூலித்த தொகையினை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்தாமல் தாமதம் செய்து வரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அறிவிப்பினை மீறி சந்தா தொகையை செலுத்தாத ஆபரேட்டர்களின் பதிவு ரத்து செய்யப்படுவதோடு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு அவர்கள் பதிவு ரத்து செய்யப்படும் போது அவர்களுக்கு பதிலாக அந்த பகுதியில் புதிய கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், அரசு நிர்ணயித்த தொகையான ரூ.70க்கு மேல் சந்தாதாரர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், அந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீதும் மேற்கூறியவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.