Monday, 28 November 2011

அழகு உங்கள் கையில்..!

அழகு குறைந்தாலோ, தலைமுடி பொலிவிழந்தாலோ வயதாகு முன் சீக்கிரமே தலைமுடி நரைத்து விட்டாலோ, தன்னம்பிக்கையே போய்விடும். நம்மை நாமே அழகுபடுத்திக் கொள்வதன் மூலமும், சிற்சில குறைகளைத் திருத்துவதன் மூலமும் தன்னம்பிக்கையை, அழகை அதிகரித்துக் கொள்ளலாம்.

நம்மில் உருவ அமைப்பு வேறுபடுவது மாதிரிதான் தலைமுடியும். சரும வகையும் வேறுபடும். அதன் அடிப்படையைத் தெரிந்துகொண்டு பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு தீர்வு காண்பதே நல்லது.


தலையை, தலைமுடியைப் பொறுத்தவரை ஆண், பெண் இருபாலாருக்குமே நிறைப் பிரச்சனைகள் இருக்கின்றன. பேன், பொடுகு, நரைமுடி, பிசுபிசுப்பு, முடி கொட்டுதல், பிளவுபடுதல், இளவயதில் வழுக்கை விழுதல் இப்படிப் பல.

பொதுவாக வீட்டில் இருப்பவர்களை விட வெளியில் அலைபவர்களைத்தான் இந்தப் பிரச்சினைகள் மிகவும் பாதிக்கிறது. இவற்றிற்கு என்ன காரணம்? அவற்றை எப்படி தீர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

கீழ் கண்டவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ இருக்கலாம்.
  • பரம்பரை
  • மாசு
  • டென்ஷன்
  • அதிகமான உடல் உஷ்ணம்
  • வைட்டமின் ஏ, இ, இரும்பு, புரோட்டீன் இவற்றில் ஏதாவது ஒரு சத்து குறைபாடு
  • பேன், பொடுகு தொல்லை
  • சரியான முறையில் தலை முடியைச் சுத்தமாகப் பராமரிக்காதது
  • தரமில்லாத சோப்பு, ஷாம்பூவை உபயோகிப்பது
  • ஹார்மோன் குறைபாடுகள்
  • டைபாய்டு ஜுரத்தால் பாதிக்கப்படுதல்
  • வேர்க்கால்கள் பலவீனமடைதல்
  • தண்ணீர் சரியாக இல்லாதது
  • அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகிப்பது
  • ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும் பக்க விளைவு.
  • பெண்களுக்குப் பிரசவத்திற்கு பின்
இந்த முடிப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா? என்று கவலைப்படாதீர்கள். கட்டாயம் உண்டு. சராசரியாக தினம் 50-லிருந்து 100 முடிகள் உதிர்வது சகஜம். அதற்கு மேல் கொட்டினால் தான் கவலைப்பட வேண்டும்.



கீழ்க்கண்ட டிப்ஸ்களை கடைப்பிடித்தாலே, பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

தலைமுடியின் ஆராக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவு முறையும் ஒரு காரணம். இன்றைய இளம் தலைமுறையினருக்கு உணவு விஷயத்தில் அக்கறையே இல்லை. ஆரோக்கியமான தலைமுடியைப் பெற ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது முக்கியம்.

எண்ணெய், கொழுப்பு மிகுந்த உணவுப் பதார்த்தங்களைத் தவிருங்கள். காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளைத் தினமும் உணவில் அதிகமாகச் சேருங்கள்.


வாரம் ஒருமுறை 'ஹாட் ஆயில் மசாஜ்' செய்து கூந்தலை அலசுங்கள்.

மேலே உள்ள முடியை மட்டம் அலசுவதால் எந்தப் பயனுமில்லை. வாரம் இரு முறையாவது இயற்கைப் பொருட்கள் கலந்த பொடி அல்லது மூலிகை கலந்த ஷாம்பூ உபயோகிக்க வேண்டும். அப்படி உபயோகிக்கும் போது, மயிர்கால்களில் உள்ள அழுக்குப் போகும்படி முடியை நன்கு அலச வேண்டும்.

தலைக்குக் குளித்தவுடன் சுத்தமான துவாலையால் ஈரத்தை துடைக்க வேண்டும்.


அவசரத்திற்கு அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகப்படுத்தினால், முடி பலவீனமடைந்து கொட்ட ஆரம்பிக்கும். எனவே, கூடுமானவரை ஹேர் டிரையர் உபயோகிப்பதைத் தவிருங்கள். அதுவும் வறண்ட கூந்தல் உடையவர்கள் கண்டிப்பாக ஹேர் டிரையர் உபயோகிக்கக் கூடாது.

எப்பொழுதும் தலைமுடியைக் காய்ந்த பிறகே வார வேண்டும். ஈரத்தோடு தலை வாரினால் பலமிழந்த முடிகள் கையோடு வந்து விடும்.

கூடுமானவரை சீப்பு, சோப்பு, டவலை தனியாக உபயோகியுங்கள்.


டூ வீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் போட்டால், முடி கொட்டுகிறது என்று நினைப்பார்கள். அதற்கு தலையில் ஒரு மெலிதான துணி அல்லது ஸ்கார்ஃப் போட்டு அதன் மேல் ஹெல்மெட் அணியலாம்.

முடி குட்டையாக இருந்தால் 4 டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெயை முதல் நாள் இரவு தலைமுடியில் தடவி அடுத்த நாள் காலை அலசுங்கள்.

நன்றி :தினகரன்
: