கம்ப்யூட்டர் முன், மணிக் கணக்காக அமர்ந்து பணிபுரிவோர், கழுத்தை சாதா நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது. சிலர், வேலையில் அதீத கவனம் செலுத்தும்போது, கழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்வர்.
நெடுநேரம் இப்படி வைத்திருந்தால், கழுத்தில் வலி ஏற்படும். நாள்பட்ட இந்த பழக்கம், கழுத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்ப, உங்கள் டேபிள், மானிட்டர், நாற்காலி ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.
சிலர், காலுக்கு, உயரம் குறைந்த பெஞ்ச் போட்டு அமர்வது வலி ஏற்படுவதைத் தவிர்க்கும் எனக் கூறுவர். இதையும் நீங்கள் செய்து கொள்ளலாம். கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்க்க, கம்ப்யூட்டர் மானிட்டரை முகத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெகு அருகில் வைத்துக் கொண்டால், பார்வை கெடும்; அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதும் அவசியம். தேவைப்பட்டால், கண்ணாடி அணிந்து கொள்ளலாம். நீங்கள் சரியான முறையில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதை, உங்கள் உடலியல் சிகிச்சை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை சீராக இயக்கும் வகையில், அவற்றின் மீது பாதம் வைத்துக் கொள்வதும் அவசியம் என்பதால், அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் சீட்டை சரி செய்து கொள்ள வேண்டும்.
வலி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? கழுத்தில் ஐஸ் கட்டி, சூடு ஒத்தடம் ஆகியவற்றை, மாறி மாறி வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான உடலியல் சிகிச்சை நிபுணர்கள், ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். இதில் வலியும், வீக்கமும் சீக்கிரம் குறையும். நாற்பது நிமிட இடைவெளியில், 15-20 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது.
- டாக்டர் பி.நாகராஜ்
வலைதளம்: www.pmnspeciaality.com