Tuesday, 8 November 2011

கடவுளிடம் சரணடைந்து விட்டால்….



பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை.
அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்… “அர்ஜுனா… என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் காப்பாற்றுகிறேன்!’ என்று.
இது, சரணாகதி தத்துவம் என்கின்றனர். ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன். இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
அதனால், “பகவானே… நீ தான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்… நான் ஏற்றுக் கொள்கிறேன்!’ என்று பகவானை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. “எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?’ என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.
பனை மரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும் போது வேரோடு பெயர்ந்து விழுகிறது; அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அது போல, பகவானிடம் வீராப்பு பேசி பயனில்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்.
ஏனென்றால், அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.
நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், “பகவானே… நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை…’ என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்றுதான் பகவானின் கருணை யைப் பெற வழி; ஞாபகமிருக்கட்டும்!