Sunday, 13 November 2011

சிசேரியன் முறை பிரசவம்



*பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
*மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.
*ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன
சிசேரியன் முறை பிரசவம் என்றால் என்ன?
*பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை வர முடியாமலிருக்கும் போதோ அல்லது அப்படி வருவது அபாயகரமானதாக இருக்கும் போதோ அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதைத்தான் சிசேரியன் முறை பிரசவம் என்கிறார்கள்.
அவசர சிசேரியன் முறை
*பிரசவ வலி ஆரம்பிக்கும் போதோ அல்லது பிரசவ வலியின் போதோ சில பிரச்சினைகள் உருவானால், உடனடியாக சிசேரியன் செய்யப்படுகிறது. பொதுவாக பின்வரும் சூழல்களில் தான் சிசேரியன் செய்யப்படுகிறது.
*பிரசவத்தின்போது, குழந்தையின் கீழிருக் கும் பாகம் தலையாக இல்லாமல் குழந்தையின் பின்புறமாகவோ, முகமாகவோ, நெற்றியோ அல்லது தோளாகவோ இருந்தால் சிசேரியன் அவசியப்படும்.பல பெண்களுக்கு பிரசவ வலியின் போது, செர்விக்ஸ் (கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி) விரிவடையத் தொடங்கும்.
*ஆனால், முழுவதும் விரிவதற்கு முன்பு விரிவடைவது நின்றுவிடும். இதற்காக ஆக்ஸிடாசின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த மருந்து கொடுத்தும் சில பெண்களால் முழுமையாக செர்விக்ஸை விரிக்க இயலாது. அதனால், அவரால் பெண்ணுறுப்பு வழியே பிரசவிக்க முடியாது.
*வேறு சில பெண்களுக்கு செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும். ஆனால், முக்கி குழந்தையை பிறப்புக் குழாய் வழியே வெளியில் தள்ள இயலாது. பிறப்புக் குழாயை விட குழந்தை மிகப்பெரிதாக இருந்தால், இந்த நிலை உருவாகும்.
*பிரசவ வலியின்போது எந்த நேரத்திலும், பிரச்சினைகள் உருவாகி குழந்தையின் இதயத்துடிப்புகள் குறையத் தொடங்கலாம். குழந்தையால் நோர்மல் பிரசவத்தை இதற்கு மேல் தாங்க முடியாது என்பதற்கு இது அறிகுறி. அதனால், உடனடியாக சிசேரியன் செய்யப்படும்.
சிசேரியன் செய்யும் முறை
*சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மருந்து கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படும்போது, அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும்.
*பொதுவான மயக்கத்தில் தசைகள் இலகுவாகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றை வெட்டுவார் மருத்துவர். பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவார்.