தத்கல் முன்பதிவு திட்டத்தில், ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்ய, தத்கல் முறையில் டிக்கெட் புக்கிங் செய்வதில், ஏராளமான அளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து, இந்த முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான கால அளவு, இரண்டு நாட்களில் இருந்து ஒரு நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியதாவது:தத்கல் முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்ப்பதற்காக, சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதனால், இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தத்கல் முறையில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான கால அளவு, இரண்டு நாட்களில் இருந்து ஒரு நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முறையில், ஏஜன்ட்கள் டிக்கெட் புக்கிங் செய்ய முன்னர், ஒரு மணி நேரம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தற்போது, இரண்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏஜன்ட்கள் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது. மேலும், உறுதி செய்யப்பட்ட தத்கல் டிக்கெட்களை ரத்து செய்தால், இனிமேல் பணம் திரும்ப வழங்கப்படாது. ரயில்கள் ரத்தானாலோ அல்லது ரயில்கள் தாமதமாக புறப்பட்டாலோ மட்டுமே, டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்படும். இந்த மாற்றங்கள் ஒரு வாரத்திற்குள் அமலுக்கு வருகின்றன.
அடையாள ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே, இனி தத்கல் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். மேலும், ஒரு டிக்கெட்டில் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும். தந்திரமான முறையில் தத்கல் டிக்கெட்களை புக்கிங் செய்து, அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், டூப்ளிகேட் தத்கல் டிக்கெட்கள் எதுவும் இனி வழங்கப்படாது. தவிர்க்க முடியாத காரணங்களைக் கொண்டுள்ள சிலருக்கு மட்டுமே, தத்கல் கட்டணம் உட்பட முழுக் கட்டணத்தையும் செலுத்தினால் டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்படும்.
முன்பதிவு வசதிகளை தவறாகப் பயன்படுத்துவோர் குறித்து தகவல் தெரிவிப்பதற்காக, விசேஷ திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும். மேலும், டிக்கெட் கவுன்டர்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும். இவ்வாறு திரிவேதி கூறினார்.