ஓங்கி உயர்ந்து நிற்கும் கோமதீஸ்வரின் சிலை அழகு கண்களுக்கு விருந்தளிக்க, அவருடைய புனித வாழ்க்கையின் சாரம் கேட்கும் காதுகளின் வழியாக.. உட்புகுந்து. கருத்தை கவர. ஆன்மாவை பேரானந்தம் தழுவிக் கொள்ள.. அடடா!” இதயம் நழுவும் இந்த அனுபவம் கிடைக்கும் இடம் கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் இருக்கும் ஷ்ரவணபெலகோலா.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 67 அடி உயரமும் 60 டன் எடையும் கொண்ட பகுபாலியின் சிலை. பகுபாலியின் மற்றொரு பெயர்தான் கோமதீஸ்வரர்.
யார் அந்த பகுபாலி? போதான் பூரை ஆண்டு வந்த சமணர்களின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபா மன்னனுக்கு 100 மகன்கள், அதில் பரதன் எனும் தலைமனுக்கு தக்கசமயத்தில் முடிசூட்டு விழா நடக்க, இரண்டாவது மகன் பகுபாலி வெகுண்டெழுகிறான். தனக்கு ராஜ்யத்தை ஆளும் தகுதி இல்லையா? என கேட்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். ஆனால் மளுநாளே போரில் தோற்ற தமையனின் வாடிய முகம் கண்டு துடிக்கிறது பகுபாலியின் மனம் துடித்த மனம் துறவறம் மேற்கொள்ள… பகுபாலி தெய்வமாகிறான். பிற்காலத்தில் விந்தியகிரி சாவண்டராயாவின் விருப்பத்தால் விந்தியகிரி மலையில் 57 அடி உயரம் கொண்ட சிலையாகிறான்.
600 படிகள் ஏறிச்சென்றால் பிரம்மாண்ட சிலை. “உலக இன்பகங்கை துறந்தவருக்கு உடை ஒரு பொருட்டா! நிர்வாணமாக விந்திய குன்றில் நிற்கும் பகுபாலியின் சிலை நமக்கு ஞானத்தை ஊட்டுகிறது. சுருண்ட தலைமுடி கற்றைகள், அகன்ற கண்களில் ஒளி, உதடுகளில் ஓரத்தில் சுழியிடும் புன்சிரிப்பு, நீண்ட கைகள், தாமரை பூ போன்ற பாதங்கள், அசைவற்ற நிலையில் தவத்தில் ஈடுபட்டிருப்பதால் சுற்றி வளைந்திருக்கும் புற்றுகள், அதிலிருந்து தலை காட்டும் நாகம், காட்டுக்கொடிகள் உடலெங்குமுஞூ சுற்றிப்படர்ந்து ஒட்டி உறவாடும் அழகு! ஆஹா.. மனம் மயங்குகிறது. ஆணவம், பொறாமை, அகங்காரம் போன்ற தீய எண்ணங்கள் தவிடுபொடியாக பகுபாலியின் பாதங்களை நம் மனம் சரணடைகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோமதீஸ்வரருக்கு மஹாமஸ்தகாபிஷேகம் நடைபெறும் சமயத்தில், உலகெங்கிலும் இருந்து சமண அன்பர்கள் லட்சக்கணக்கில் குவிகிறார்கள். சரி! பகுபாலியை ஏன் “கோமதீஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள்? சாவண்டராயாவுக்கு “கோமடா’ என்ற மற்றொரு பெயர் உண்டாம் . கோமடாவின் ஈஸ்வரன் பகுபாலி! அதனால்தான் கோமதீஸ்வரர் என்ற பெயர்!
பகுபாலி… கோமடாவுக்கு மட்டும் ஈஸ்வரன் அல்ல! நமக்கும்தான்.!
நாடோடி வணக்கம்:
ஷ்ரவணபெலகோலவுக்கு வழி சொல்லணுமா?
பெங்களூரு வரைக்கும் விமானம்; அங்கே இருந்து பஸ்/டாக்ஸி. இல்ல.. ஹஸன் வரைக்கும் ரயில்: அங்கே இருந்து பஸ்/ டாக்ஸி/ஆட்டோ, ஒகே?
கோமதீஸ்வரர் சிலைக்கு பிரம்மாண்டமான மஹாமஸ்தாகபிஷேகம் நடந்தது 2006-ம் வருஷம் பிப்ரவரி மாசம். அடுத்த அபிஷேகம் 2018ல் நடக்கப் போகுது. அருள்மழையில் நனைய தயாராயிட்டீங்களா?
ஷ்ரணபெலகோலாவுல இருந்து 25 கி.மீ. தொலைவுல இருக்கற ஹலபேடு ஹோய்சாலேஸ்வரர், கேதாரேஸ்வரர் கோவில்களோட சிற்பங்களை மட்டும் பார்த்துராதீங்க. ஏன்ன.. கிளம்பிவர்றதுக்கு மனசே இருக்காது!