Thursday 3 November 2011

இந்தியாவின் தேசிய பானம் டீ..?

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொங்கோர்பில்லி கிராமத்தைச் சேர்ந்த வட்டத்தாரா குடும்பத்தினர், பால் சேர்க்காத `கறுப்பு காபி’ அடிமைகள்.
இவர்கள் மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்தக் கிராமமுமே அப்படித்தான். இங்கே இது இயல்பான விஷயம். காரணம் இக்கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் காபி விளைவிப்பவர்கள்.
இந்நிலையில், 40 வருடங்களுக்கு முன் வட்டத்தாரா குடும்பத்தில் இருந்து வி.எம். தாமஸ் என்பவர் பாதிரியார் படிப்புப் படிக்க அசாமுக்குப் புறப்பட்டுப் போனார்.
தாமஸின் மதக் கல்விப் பற்று, காபியை புதிய எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் என்று ஆசிரியரான அவரது தந்தை நம்பினார். ஆனால் நடந்ததோ வேறு. தீவிர டீ பிரியராகிவிட்டார் தாமஸ்.
“டீக்கு புகழ்பெற்ற அசாமில் 30 ஆண்டுகளைக் கழித்த நான், அந்தப் பானத்துக்கு மாறியதில் ஆச்சரியமில்லை. ஆனால் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வந்தபோது இங்கே ஏறக்குறைய எல்லோரும் டீ குடித்துக் கொண்டிருந்ததுதான் என்னை வியப்பில் விழவைத்தது” என்கிறார், தற்போது 60 வயதாகும் தாமஸ்.
கொங்கோர்பில்லி மட்டுமல்ல, இந்தியாவின் 5 லட்சத்து 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களும், 4 ஆயிரத்து 378 நகரங்களும் அன்றாடம் டீ அருந்தி மகிழ்கின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஒருநாளைக்கு ஒரு கோடி டீக்கு மேல் அருந்தப்படுகிறது. பெருநகரங்கள், நகரங்களில் மட்டுமல்ல, சாலை வசதி இல்லாத கிராமத்தில் கூட ஒரு குட்டி டீக்கடை முளைத்திருப்பது உங்களுக்கும் தெரியும்.
ஏன், இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் கூட ஒரு டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கலாம். இந்தியாவின் 83 சதவீதக் குடும்பங்கள் டீக்கு அடிமை என்கிறது ஒரு கணக்கெடுப்பு.
இதெல்லாம் சேர்ந்துதான், டீயை இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரத்து ஒலிக்கச் செய்திருக்கின்றன.
சரி, டீயை தேசிய பானமாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது?
`பல நல்ல விஷயங்கள் நடக்கும்’ என்கிறார்கள், தேயிலை விளைவிப்போர்.
`டீக்கு ஒரு நல்ல பிராண்ட் மதிப்பு கிடைக்கும், சர்க்கரை, பாலுடன் அல்லது அவையின்றி (சில இடங்களில் வெண்ணையுடனும் கூட) இதை ஓர் ஆரோக்கிய பானமாகப் பிரபலப்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய பானம் என்பது ஒரு நாட்டின் அடையாளம், சுய மதிப்பு, வரலாறு, சூழலியல், கலாசாரம் ஆகியவற்றின் ஓர் அங்கம்’ என்கிறார்கள், தேயிலைக்காரர்கள்.
`டீ தேசிய பானம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் இருப்பது, வடகிழக்குத் தேயிலைச் சங்கம் (என்.இ.டி.ஏ). கிழக்கு அசாமில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த கோலாகாட் மாவட்டத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.
“இந்த விஷயத்தில் நாம் பாகிஸ்தானிடம் பாடம் படிக்க வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கரும்புச் சாறை தேசியப் பானமாக அறிவித்துவிட்டார்கள். தேயிலை உற்பத்தியில் உலகின் `நம்பர் 1′ நாடாக இருக்கும் சீனாவையும் எடுத்துக்கொள்ளுங்களேன். அங்கு `கிரீன் டீ’தான் தேசிய பானம்” என்கிறார், என்.இ.டி.ஏ.வின் தலைவர் வித்யானந்தா வர்க்ககோதி.
தொடர்ந்து அவரே, “இந்த நாடுகளை எல்லாம் கூட விட்டுவிடுங்கள். இங்கிலாந்தைப் பாருங்கள். அந்நாட்டுக்குப் பெரும்பாலும் தேயிலையை ஏற்றுமதி செய் பவர்கள் நாம்தான். ஆனால் இங்கிலாந்து தேசிய பானம், டீ! கடந்த 180 ஆண்டுகளாக பல்வேறு வகையான தேயிலையை உற்பத்தி செய்துவரும் நாம், டீக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது வினோதமே” என்று ஆதங்கப்படுகிறார்.
சொல்லப் போனால், இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் 50 சதவீதத்துக்குச் சொந்தமான அசாமிலும் கூட டீக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கடந்த 2005-ம் ஆண்டில், இம்மாநிலத்தின் விலங்காக காண்டாமிருகமும், மாநிலப் பறவையாக வெள்ளை இறக்கை மர வாத்தும் அறிவிக்கப்பட்டன. ஆனால் டீயை கண்டுகொள்ளவில்லை.
இதற்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி தருண் கோகோயைச் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாகக் கூறுகிறார், என்.இ.டி.ஏ. உறுப்பினர் சிங்கானியா. மாநிலப் பானமாக அறிவிப்பது, தேசிய பானமாக்குவதற்கான முதல் படியாக அமையும் என்பது இவரது கருத்து.
ஏறக்குறைய பாதி உலகத்துக்கு, `அசாம்’ என்ற பெயரை அறியச் செய்த டீயை அதிகாரப்பூர்வ பானமாக அறிவிக்காதது தவறுதான் என்று ஒத்துக்கொள்கிறார், அசாம் மாநில தொழில்துறை அமைச்சர் பிரத்யூத் போர்டோலோய். இந்த விஷயத்தில் தாங்கள் கவனம் செலுத்துவோம் என்கிறார் இவர்.
நாடு முழுவதும் உள்ள டீ நேசர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்!

டீ… சில துளிகள்

* தேயிலை உற்பத்தியில் உலகளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்.
* உலகிலேயே அதிகமாக தேநீர் பருகும் நாடு இந்தியா. நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் இந்தியர்கள் ருசிக்கிறார் கள்.
* இந்தியாவில் ஏறக்குறைய பாதி அளவு தேயிலையை உற்பத்தி செய்வது அசாம். உலக அளவில் இம்மாநிலத் தின் பங்கு 13 சதவீதம்.
* உலகளவில் தேயிலை ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடு இந்தியா. உலக ஏற்றுமதியில் நமது பங்கு 13 சதவீதம்.
* பல்வேறு வகையான மணம், திடம், குணம் கொண்ட தேயிலைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கியமானவை- டார்ஜீலிங், அசாம் பராம்பரியம், அசாம் சிடிசி, டூரர்ஸ்-தேராய், நீலகிரி பாரம்பரியம், நீலகிரி சிடிசி, காங்ரா மற்றும் பச்சைத் தேயிலை.
* பூமியில் தண்ணீருக்குப் பின் விலை மலிவான பானம், டீ.
***

இன்னும் கொஞ்சம் டீ…

இந்தியாவில் தேயிலைத் தொழிலில் 10 லட்சத்து 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர்.
நாட்டில் இத்தொழிலில் 20 லட்சம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
தேயிலையில் நாட்டின் வருடாந்திர வரவு- செலவு ரூ. 10 ஆயிரம் கோடி.
நாட்டில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் எக்டேரில் தேயிலை விளைவிக்கப்படுகிறது.
இந்தியாவில் 10 எக்டேருக்கும் குறைவான பரப்பளவுள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 504 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
***

சில நாடுகளும், தேசிய பானங்களும்

கிரீஸ் – `ஊஸோ’ என்ற மதுபானம்
ஜப்பான் – `சேக்’ என்ற அரிசி மதுபானம்
பாகிஸ்தான் – கரும்புச் சாறு
சீனா – டீ
இங்கிலாந்து – டீ
ரஷியா – வோட்கா
ஸ்காட்லாந்து – விஸ்கி


நன்றி-தினத்தந்தி