Saturday, 12 November 2011

இன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத்திரிகைகள், டிவிக்களில் செய்தி வெளியிட கூடாது ?


இன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத்திரிகைகள், டிவிக்களில் செய்தி வெளியிட கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், டிவிக்களில் அரசுக்கு எதிராக பல செய்திகள் இடம்பெறுவது குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  சீன சுரங்கத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளனர் என்று சமீபத்தில் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற செய்திகள், இன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றில் வந்த செய்திகளை ஆதாரமாக காட்டி பத்திரிகைகளில் வெளிவருவது தெரிந்தது. 

அந்த செய்திகளில் உண்மை தன்மை இல்லை என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, இன்டர்நெட், டுவிட்டரில் வரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராயாமல் அவற்றை பத்திரிகை, டிவிக்களில் வெளியிடக் கூடாது என்று சீன தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய செய்திகளை சேகரிக்கும் போது, பேட்டிகளையும் அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிட வேண்டும். தவறான செய்திகளுக்கு மன்னிப்பும், சரியான செய்திகளையும் உடனே பிரசுரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவுகளை மதிக்காத மீடியாக்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தவறான செய்திகளால் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் நாட்டின் சமூக, பொருளாதாரமும் கெடுகிறது என்றனர். ஏற்கனவே ஆயிரக்கணக்கான வெப்சைட்களை சீன அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.