Wednesday, 19 October 2011

மத்திய கிழக்கின் ”டாப் 10” செல்வாக்கான இந்தியர்கள் – அமீரகம், கேரளா, தமிழகத்தின் ஆதிக்கம்!


துபாய் : துபாயிலிருந்து வெளிவரும் பிரபல வணிக இதழ் வளைகுடாவின் செல்வாக்கான மனிதர்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் வளைகுடாவின் பணக்கார இந்தியர்கள் குறித்த கட்டுரையை இந்நேரம் வாசகர்களோடு பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டதைப் போல் வளைகுடாவின் டாப் 10 செல்வாக்கான மனிதர்களை குறித்த தகவல்களை நம் இந்நேரம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.
செல்வாக்கான இந்தியர்கள் என்பது அவர்களின் செல்வத்தைப் பொறுத்தது மட்டுமல்ல; அவர்களின் தொழிலின் தன்மை, தொழிலாளர் எண்ணிக்கை, அவர்களின் தயாரிப்புகள் சந்தையைப் பாதிக்கும் அளவு, அவர்களின் தனிப்பட்ட சமூக செல்வாக்குப் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இப்பட்டியலில் அமீரகத்தைச் சார்ந்தவர்கள் 6 நபர்கள் உள்ளனர். அது போல் கேரளாவைச் சார்ந்தவர்கள் நால்வரும் தமிழகத்தைச் சார்ந்ச்ர் மூவரும் உள்ளனர். இதோ அப்பட்டியல்:

1.    யூசுப் அலி :
  செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மிக்கி ஜக்தியானியைப்     பின்னுக்கு தள்ளி விட்டு செல்வாக்கான இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள கேரளாவைச் சார்ந்த யூசுப் அலி இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர்.
EMKE குழுமத்தின் நிர்வாக இயக்குநராக வெற்றிகரமாக நடத்தி செல்கிறார். வலிமையான போட்டிகள் நிறைந்த சிறு வர்த்தக பிரிவில் வெற்றிகரமாக விளங்கும் லூலூ சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் இவரின் எம்கே குழுமத்தைச் சார்ந்தவையே.
அபுதாபியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இவரின் குழுமத்தில் 22,000 இந்தியர்கள் உள்ளிட்ட 27,000 நபர்கள் பணி புரிவதோடு 3.75 பில்லியன் டாலர் ஆண்டுதோறும் வர்த்தகம் நடக்கிறது. 2005ல் அபுதாபி சேம்பர் ஆஃப் காமர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2.    மிக்கி ஜக்தியானி : லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான மிக்கி ஜக்தியானி தான் வளைகுடாவின் பணக்கார இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சார்ந்த மிக்கி ஜக்தியானி 1973ல் முதல் ஸ்டோரை பஹ்ரைனில் தொடங்கினார். இன்றோ, துபாயை தலைமையிடமாக கொண்டு சிறுவர் பேஷன், காஸ்மெட்டிக்ஸ் என்றும் நியூ லுக், மேக்ஸ், செண்டர் பாயிண்ட், பேபி ஷாப், ஹோம் செண்டர் என்று பல பிராண்டுகளுடனும் பரந்து விரிந்து உள்ளது இவரின் வர்த்தக சாம்ராஜ்யம்.

3.    சன்னி வர்கீஸ் :
கேரளாவை சார்ந்த சன்னி வர்கீஸால் 1980ல் ஒற்றை பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட    Our Own High School இன்று உலகின் மிக பெரிய கல்வி குழுமங்களில் ஒன்றாக திகழ்கிறது. 11 நாடுகளில் 100 பள்ளிகளில் சுமார் 1 இலட்சம் மாணவர்கள் கிண்டர் கார்டனில் இருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.
தற்போது வளைகுடாவையும் தாண்டி ஆப்பிரிக்காவிலும் ஒரு பள்ளிகூடத்தை ஆரம்பித்துள்ளது வர்கீஸின் ஜெம்ஸ் குழுமம்.
4.    சங்கர்
கடந்த மே 2010ல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியகிழக்கின் தலைமை நிர்வாகியாக சங்கரை ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கி நியமித்தது. மத்தியகிழக்கின் அவ்வங்கியின் மிகப்பெரும் பொறுப்பில் உள்ள சங்கர் இவ்வங்கியில் 2001 ல் சேர்வதற்கு முன் பேங்க் ஆப் அமெரிக்காவில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழகத்தைச் சார்ந்த சங்கர் புகழ் பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூரில் எம்.பி.ஏவும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் இளநிலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5.    முஹம்மது அலி
கேரளாவைச் சார்ந்தவரும் கல்பார் எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷ்ண்ஸ் நிறுவனருமான முஹம்மது அலி மிக வெற்றிகரமான தொழில் முனைவர் ஆவார். கட்டுமானம், எண்ணைய் மற்றும் இயற்கை வாயு என விரிந்து பரந்துள்ள இவரின் நிறுவனம் இன்றைய நிலையில் ஓமனின் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ஆகும்.
ஓமன் பெட்ரோலியம் அல்லயண்ஸின் நிறுவனரான முஹம்மது அலி தனது பிஎம் பவுண்டேஷன் மூலம் கேரளாவில் கல்வி உதவிகளையும் செய்து வருகிறார்.

6.    மகன்மால் பன்ஞ்சோலியா
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் சீன கார்கோ கப்பல் மூலம் கராச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு வந்து அங்குள்ள துறைமுகத்தில் சிறிய அளவில் பொருட்களை விற்றவர் இன்று அமீரக இந்திய தொழிலதிபர்களின் முகமாக விளங்குகிறார். 1957-லேயே மின்சாரத்தின் தேவையைத் தொலை நோக்காக கணிப்பிட்டு அமீரக அரசு, முறையாக மின்சார வாரியம் அமைக்கும் முன்னே ஜெனரேட்டர்கள் மூலம் துபாய் கிரீக் பகுதியில் உள்ள கடைகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்தார்.
சிறிய அளவில் படிப்படியாக முன்னேறியவர் இன்று அரேபியன் டிரேடிங் ஏஜென்ஸியின் தலைவர் ஆக உள்ளார். மேலும் துபாய் சேம்பர் ஆப் காமர்ஸ், அல் மக்தூம் மருத்துவமனை மற்றும் நேஷனல் பேங்க் ஆப் துபாய் உள்ளிட்டவற்றிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7.    சையது சலாஹுதீன்
அமீரகத்தில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சயமான பெயர் ETA. 1973 -ல் துபாயில் உள்ள அல் குரைரின் ஒத்துழைப்புடன் தமிழகத்தைச் சார்ந்த பி.எஸ். அப்துர் ரஹ்மானால் கட்டுமான நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஈ.டி.ஏ அஸ்கான் இன்று அமீரகத்தில் கட்டுமானம், லிப்ட், எலக்ட்ரோ மெக்கானிகல் சேவைகள், ஆடை, போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல்துறை நிறுவனமாக பரிணமிப்பதில் நிச்சயமாக ஈடிஏ ஸ்டார் நிர்வாக இயக்குநர் சலஷுத்தினுக்கு முக்கிய பங்குண்டு.
1.36 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்றியுள்ள இந்நிறுவனம் 21 நாடுகளில் உள்ளதோடு 75,000 பணியாளர்களையும் கொண்டுள்ள மிகப் பெரிய நிறுவனமாகும். தன் வர்த்தக திறன்களுக்காக மத்தியகிழக்கின் முன்னேற்றத்திற்குச் சிறந்த பங்காற்றிய ஆசியன் விருதைப் பெற்றவர் சலாஹுத்தின். மேலும் அவர் இந்திய முஸ்லீம் அஸோஷியனின் தலைவராகவும் உள்ளார்.

8.    டாக்டர் திது மைனி
கத்தார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவின் தலைவராக விளங்கும் திது மைனி இதற்கு முன் லண்டனிலுள்ள இம்பீரியல் காலேஜில் பணியாற்றியவர் என்பதோடு பாதுகாப்பு, மிண்ணணுவியல், உற்பத்தி துறை, தொழில்நுட்ப நிறுவனங்களில் 30 வருட அனுபவம் கொண்டவர்.
மேலும் ஸ்கூலும்பெர்கர் நிறுவனத்தின் மூத்த துணை தலைவராகவும், சீமா குழுவின் நிர்வாக உறுப்பினராகவும், ஜீஈசி மார்கோனியின் துணை தலைவராகவும் ஜீஈசி சாப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக தலைவராகவும் இருந்தவர்.

9.    பி.என்.சி.மேனன்
கேரளாவில் பிறந்த மேனன் 1976ல் ஓமனுக்குக் குடிபெயர்ந்து இண்டீரியர் டெக்கரேட்டிங் நிறுவனத்தை ஆரம்பித்தார். 1995ல் இந்தியாவில் ஷோபா டெவலப்பர்ஸை ஆரம்பித்து ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டி பறக்கிறார்.
35 வருடங்கள் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் அனுபவமுள்ள மேனன் சோபா டெவலப்பர்ஸ் மூலம் இது வரை 71 குடியிருப்பு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

10.    சீத்தாராமன் :
கடந்த ஆண்டின் பட்டியலை விட 49 இடங்கள் முன்னேறியுள்ள தோஹா வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாகியான சீத்தாராமன் தமிழகத்தைச் சார்ந்தவர். எப்போதும் தனது அடையாளமான Bow tie எனப்படும் சிறு கழுத்துப் பட்டையுடன் காணப்படும் சீத்தாராமன் சுமார் 30 வருடங்கள் வங்கி, ஐடி மற்றும் நிர்வாக ஆலோசனை துறைகளில் அனுபவம் கொண்டவர்.
வங்கி துறையைத் தாண்டி புவி வெப்பமயமாகுதல் உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக கடந்த ஆண்டு சர்வதேச இந்தியன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்தவர். அது போல் பொருளாதார நெருக்கடியின் போது "இஸ்லாமிய வங்கியியலே தற்போதைய பிரச்னைகளுக்குத் தீர்வு" என்று கூறி சர்வதேச கவனத்தைக் கவர்ந்தவர்.