சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பள்ளிகள் துவங்கி இரண்டரை மாதங்கள் கழித்துத் தான் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
வழக்கமான கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தவேண்டுமெனில், அதற்குரிய காலகட்டத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு, தற்போது கால அவகாசம் இல்லாத நிலை உள்ளது. இதனால், வகுப்புகள் நடக்காத நாட்களை ஈடுகட்டுவதற்காக, ஏற்கனவே சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.பெரும்பாலான தனியார் பள்ளிகள், சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்குகின்றன. இந்நிலையில், அனைத்து வகையான பள்ளிகளுக்கும், பள்ளி முடியும் நேரத்தை அரை மணி நேரம் நீட்டிப்பு செய்து, பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம், ஓரளவுக்கு பாடம் நடக்காத நாட்களை ஈடுகட்டி, குறித்த நேரத்தில் பாடங்களை நடத்தி முடிக்க முடியும் என்று, பள்ளிக் கல்வித்துறை நம்புகிறது. அரசின் உத்தரவையடுத்து, சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பள்ளிகளின் முடியும் நேரம், நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
நேர நீட்டிப்பு குறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “பள்ளி முடிந்ததும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும். தற்போது அரை மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், நகரங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பிரச்னை வராது. ஆனால், கிராமப்புறங்களில், பஸ் வசதி குறைவாக இருக்கும் இடங்களில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், நேர நீட்டிப்பால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்றார்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் காலை 8.40 மணிக்கு பள்ளிகள் துவங்கி மாலை 4 மணி வரை இயங்கும். கிராமப்புற பகுதிகளில் காலை 9.45 மணிக்கு பள்ளிகள் துவங்கி மாலை 5 மணி வரை இயங்கும்.