Friday 14 October 2011

புகைப்பிடித்தால் புத்திக்கூர்மை பாதிப்படையும்

 புகை மனிதனுக்குப் பகை என்பது அனைவருக்கும் தெரியும், புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் புகை பிடிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.
தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இருக்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 101 புள்ளிகள் அறிவுத்திறன் இருக்கும் நிலையில் புகைப் பிடிப்பவர்களுக்கு 94 புள்ளிகள் மட்டுமே அறிவுத்திறன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்களே அதிகம் புகைப்பிடிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் புகைப்பழக்கம் மன அழுத்தத்தை அதிகரித்து மனநல பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது மேலும் புகைப்பழக்கம் குடிப்பழக்கத்திற்கும் வழிவகுக்கிறது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.
புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாரடைப்பு, புற்றுநோய், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிந்த விடயம்.
ஆனால் மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றையும், குழந்தைகளுக்கு காதுகோளாறு, ஆகியவையும் பரப்புகின்றனர். புகைப்பழக்கத்தில் இருந்து மீள மனரீதியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
வேலையில் டென்சன் ஏற்பட்டால் புகையை நாடாமல் நல்ல இசையை ரசிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உடற்பயிற்சி, தியானம் போன்றவையும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.