Friday 28 October 2011

ஞானிக்கும் தாய்ப்பாசம் உண்டு


எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்து, அதன் மூலம் ஞானத்தைக் கொடுத்த, தில்லையிலே விளையாடும் சிவகாமிநாதனைக் காண விழைந்தேன்.
நேரே சிதம்பரம் சென்றேன்.
ஆனந்தக் கூத்தனின் முன்னால் மெய்மறந்து பாடினேன்:
காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும்
பொன்னுக்குங் காசினுக்குந்
தாம்பினங் கும்பல வாசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
போம்பிணந் தன்னைத்திரளாகக் கூடிப்புரண் டினிமேற்
சாம்பிணங் கத்துதை யோ?வென் செய்வேன்
தில்லைச் சங்கரனே!
காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன! கந்தைசுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்கு விண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுபவரே!
என் மகனைச் சுமந்து வந்த பிராமணர்கள், எந்தத் திருவிடை மருதூரில் இருந்து வந்தார்களோ, அந்தத் திருவிடைமருதூரில் நான் மெய் மறந்து பாடிக்கொண்டே இருந்த போது, என் உடம்பில் ஏதோ ஊர்வது போல் தோன்றிற்று. கண்ணை விரித்துப் பார்த்தேன்.
என் தாயார் என் இடுப்பில் கட்டிவிட்ட சேலைத்துணி முடிச்சு அவிழ்ந்திருந்தது. அதில் இருந்து அரிசியும், உப்பும் என் தொடையில் உருண்டு கொண்டிருந்தன.
`ஆத்தா!’ என்று அலறினேன்.
நல்லவேளை, நான் திருவொற்றியூரில் இருக்கும் போது ஆண்டவன் இந்தச் சோதனையைக் காட்டி இருந்தால், மரணம் நிகழ்ந்து சடலம் எரிந்த பின்தானே நான் புகாருக்குப் போயிருக்க முடியும்?
திருவிடைமருதூரில் இருந்து கால்நடையாகவே புகாருக்கு ஓடினேன்.
வீட்டை நெருங்க, நெருங்க `கடைசியாக ஒரு மொழியாவது தாயுடன் உரையாட மாட்டோமா?’ என்று மனம் அடித்துக் கொண்டது.
வெளியிலே ஏராளமான கூட்டம்.
விலக்கிக் கொண்டு உள்ளே ஓடினேன்.
என் தாயாரின் ஆவியைத் தில்லைக்கூத்தன் எனக்காகவே நிறுத்தி வைத்திருந்தான்.
என் தந்தை இறந்த நாளில் இருந்து என் தாயார், தன் கணவனோடு தூங்கி இருந்த கட்டிலில் தூங்குவது இல்லை. பாயை விரித்துத் தரையிலே தான் தூங்குவார்கள்.
இப்போது இருப்பது மரணப் படுக்கை அல்லவா! அதனால் கடைசியாக அந்தக் கட்டிலில் போட்டிருந்தார்கள்.
பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்.
`ஆத்தா’ என்றேன்.
`சுவேதா!’ என்றார்கள்.
`வந்து விட்டாயா?’ என்றார்கள்.
`வந்து விடுவேன் என்றபடி வந்து விட்டேன்!’ என்றேன்.
`இனி நான் வெந்து விடுவேன்!’ என்றார்கள்.
என் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். என்னைக் குனியச் சொல்லிக் கன்னத்தில் முத்தம் இட்டார்கள். நான் மறுபடியும் குழந்தையானேன்.
பிடித்திருந்த கையை எடுக்க முயன்றேன். முடியவில்லை.
`ஆத்தா!’ என்றேன்.
திறந்திருந்த அவர்கள் கண்களை மூடினேன்.
நான் அழுதேன். என் தமக்கையும் அழுதாள்.
என் அழுகை ஓயவில்லை. அவள் அழுகை ஓய்ந்து விட்டது.
சடலத்தைத் தூக்குவதற்கு முன்பாகவே, `எந்தப் பெட்டகத்தையும் யாரும் திறக்கக் கூடாது’ என்று சத்தம் போட்டார்கள் தமக்கை.
என்னையே நினைத்து, எனக்காகவே உருகி, வெள்ளைக் கலை உடுத்தி விதவை போல் நின்ற என் மனைவியைப் பார்த்துத்தான் அப்படிச் சத்தம் போட்டார்கள்.
நான் எதுவும் பேசவில்லை.
என்னைப் பெற்றவள் போய்விட்டாள், நான் இனிப் பெற முடியாதவள் போய்விட்டாள். நான் லெளகீகத்தில் இருந்து எனக்குப் பிள்ளை பிறக்குமானால் என் தாயே வந்து பிறக்கக் கூடும். அதற்கும் வழியில்லை.
ஊரார் கூடினர். உறவினர் கூடினர். சடலத்தை வைத்துக் கொண்டே சொத்துத் தகராறு நடந்தது.
பங்காளிகள் இரவு வரை வாதிட்டனர்.
முழுவதும் தனக்கே என்றாள் தமக்கை. குறுக்கே நிற்கவில்லை என் மனைவி.
ஆயினும் பங்காளிகள் சம்மதிக்கவில்லை.
`நான்கில் ஒரு பங்கு தமக்கைக்கு, மூன்று பங்கு என் மனைவிக்கு’ என்று தீர்ப்பளித்தார்கள்.
ஆனால், நான் சொல்வதே முடிவு என்றார்கள்.
நான், `எல்லாம் கோயிலுக்கே!’ என்று கூறிவிட்டேன்.
பிறகு நான் கொள்ளி வைக்கக் கூடாது என்று தடுத்தாள் தமக்கை. அதுவும் ஏற்கப்படவில்லை.
கேளுங்கள்…
நீங்கள் சொத்து வைத்துவிட்டு இறந்தால் உங்களைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். சொத்தைப் பற்றியேதான் கவலைப்படுவார்கள். சொத்து இல்லாமல் இறந்தால்தான் உங்களுக்காக அழுவார்கள்.
சொத்துள்ளவன் `சீக்கிரம் சாகமாட்டானா?’ என்று சுற்றத்தார் நினைப்பார்கள்.
சொத்தில்லாதவன் `உயிரோடு இருந்தால்தானே நம்மைக் காப்பாற்றுவான்’ என்று உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள்.
சடலம் குளிப்பாட்டப்பட்டது. அப்போது தான் எனக்கொரு பாடல் தோன்றிற்று.
அத்தமும் வாழ்வு மகத்துமட்டே! விழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு
கைத்தல மேல் வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே
பற்றித் தொடரு மிருவினைப் புண்ணியப் பாவமுமே!
தாய்க்குச் சிதை!
என்னைப் பெற்று வளர்த்துப் பேணிய மாதா எரியப் போகிறாள்! நான் பிள்ளையானேன். ஞானி என்பதை மறந்தேன். அழுதேன்; துடித்தேன்; பாடிப் பாடிப் புலம்பினேன்.
ஐயிரண்டு திங்களா யங்கமெலா நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி?
முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாளளவும்
அந்திபக லாச்சிசுவை யாதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?
நொந்து சுமந்து பெற்று நோவாம லேந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றுந்தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?
அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு;
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்உருசியுள்ள
தேனே! அமிர்தமே! செல்வத் திரவியப்பூ
மானே! எனவழைத்த வாய்க்கு?
அள்ளி இடுவ தரிசியோ? தாய் தலைமேற்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம் வைத்து முத்தாடி யென்றன்
மகனே! எனவழைத்த வாய்க்கு?
முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்;
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க! மூள்கவே!
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்ப
லாகுதே பாவியே னையகோ! காகம்
குருவி பறவாமல் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்ந்தெடுத்த கை!
வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ? சந்ததமும்
உன்னையே நோக்கி யுகத்து வரங்கிடந்தென்
தன்னையே ஈன்றெடுத்த தாய்!
வீற்றிருந்தா அன்னை; வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தாள், இன்றுவெந்து நீறானாள் பாற்றெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்றி ரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.
ஈன்றெடுத்த மாதாவின் சடலம் எரிந்து முடிந்தது.