Wednesday, 26 October 2011

தீபாவளி – உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சி ஒளி


பண்டிகையன்று அறுசுவை உணவும், இனிப்புகளும் உண்பதால், நம் மனம் மட்டும் திருப்தியடையும். இதையே அனாதை ஆசிரமத்தில் உள்ளவர்களின் ஒரு வேளை உணவிற்கு செலவு செய்தால், பலரது வயிறும், மனமும் திருப்தியடையும்.
தீபாவளி என்றால் சந்தோஷம் தான். எல்லாருடைய சந்தோஷத்திற்கும் அந்த வீட்டின் பெண்கள்தான் பெரும்பாலும் பொறுப்பாக இருக்கின்றனர். அதனால், கண்டிப்பாக அவர்களுக்கு சந்தோஷத்தை விட, டென்ஷன் அதிகமாக இருக்கும். நம் வாசகியரின் தீபாவளி டென்ஷனை குறைத்து, எப்போதும் இல்லாத சந்தோஷத்துடன் இந்த
தீபாவளியைக் கொண்டாட சில ஐடியாக்கள்…
பண்டிகைக்கு முந்தைய நாளே, வேண்டிய காய்கறிகள், சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்வது, பண்டிகையின் அலைச்சல்களைத் தவிர்க்கும்.
லீவுதானே என்று தீபாவளியன்று அதிகம் தூங்கி விடாமல், காலையில் சீக்கிரமே எழுந்து கொள்வதால், தீபாவளியை கொண்டாட நமக்கு நீண்ட பகல் நேரம் கிடைக்கும். நம் எல்லா வேலைகளையும் சுலபமாக முடித்து விடலாம். மேலும், நல்ல புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
பொதுவாகவே, காலையில், 4:30 மணியிலிருந்து, 6:00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்போம். இந்த பொழுதில் யோகிகளும், தவசிகளும் இறைவனை தொழுவர். அந்த பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, புத்துணர்ச்சியோடு பகவானை வணங்கி, அன்றைய வேலைகளை துவங்கலாம்.
தீபாவளி அமர்க்களத்தில் பட்டுப் புடவையில் படும் அழுக்கை நீக்க வேண்டும் என்றால்… நல்ல ட்ரை கிளீனரிடம் கொடுத்து, சுத்தம் செய்து கொள்ளலாம் அல்லது சாதாரண தண்ணீரில் பார்டர் தனியாகவும், புடவையை தனியாகவும் நனைத்து, நிழலில் ஒற்றையாக காயப் போடலாம்.
தீபாவளிக்காக புடவை வாங்கியதும், அதை டெய்லர் கடையில் கொடுத்து, புடவையின் ஓரத்தை மடித்து அடித்து, அப்படியே, “பால்சும்’ தைத்து விடுங்கள். பிறகு தைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால், பண்டிகையன்று உடுத்திக் கொள்ளும் போது, புதுசு உடுத்தும் சந்தோஷம் இருக்காது. தொடர்ந்து வேலைகளால், ஓரம் தைக்காமலேயே போய் விடவும் சாத்தியமுண்டு.
அதே போல், “பிளவுஸ்’ தைக்க வேண்டுமானால், பண்டிகைக்கு, 20 நாட்கள் முன்னதாகவே தைத்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், “பிளவுஸ்’ நமக்கு தொளதொளவெனவோ அல்லது இறுக்கமாகவோ இருந்தால், மறுபடியும் சரி செய்து கொள்ள நேரம் இருக்கும்.
ரெடிமேட் உடைகள் வாங்கும் போது, கவனிக்க வேண்டிய விஷயம் இது… முடிந்தவரை கடையில், “ட்ரையல்’ அறையில் ரெடிமேட் உடைகளை போட்டு, அளவு சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டே வாங்க வேண்டும். கூடவே தையல் பிரிந்திருக்கிறதா என்ற விஷயங்களையும் முதலிலேயே கவனித்து வாங்க வேண்டும்.
மேல் நாடுகளைப் போலவே, நம் நாட்டிலும், குடும்பத் தொடர்பு குறைந்து வருவதால், குழந்தைகளுக்கு பிறரை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பண்டிகைகள் தான் அதற்கு சிறந்த வழி.
தீபாவளிக்கு வரும் விருந்தினர்களுக்கு ஸ்வீட், காரத்தை தட்டில் அப்படியே கொடுத்து பயமுறுத்தாமல், கல்யாணங்களில் செய்வது போல் பாக்கெட் செய்து கொடுக்கலாம். தேவைப்பட்டால் சாப்பிட்டுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அவர்கள் கிளம்பும் போது கையில் கொடுத்தும் அனுப்பலாம்.
தீபாவளியன்று ஸ்வீட், காரம் என்று ஹெவியாக இருக்கும். அதனால், அன்றைய சமையலில் மிளகு, சீரகம், இஞ்சி அதிகம் சேர்த்து, எண்ணெய், தேங்காயை குறைத்துக் கொள்ளவும். விருந்து பேலன்ஸ்டாக இருக்கும்.
தீபாவளியன்று இரவில் விருந்து, பார்ட்டி போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். ஏற்கனவே வயிறு ஹெவியாக இருக்கும் போது, வெளியிலும் விருந்து போக வேண்டாம். கஞ்சி போன்ற திரவ உணவுகளே நம் வயிறை சாந்தப்படுத்தும்.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீருடன் சிறிது வினிகரை கலந்து, பூஜைக்கான பித்தளைச் சாமான்களை அழுத்தி தேய்த்தால் அவை நன்கு பளிச்சிடும்.
தீபாவளியன்று, வீட்டின் முன்புறமுள்ள வாசற்படியில் அதிகாலையிலும், மாலையிலும் இரு அகல் தீபங்களை ஏற்றவும். தொடர்ந்து தினமும் இதைச் செய்தால், நம் வீட்டில் மகாலட்சுமி என்றும் குடியிருப்பாள் என்பது ஒருநம்பிக்கை. மத்தாப்பு போன்றவற்றை கொளுத்துவதற்கு முன், ஒரு மெழுகுவர்த்தியோ அல்லது சிம்னி விளக்கோ (கிளாசை நீக்கிவிட்டு) ஏற்றி வைத்துக் கொண்டால், தீப்பெட்டியின் அவசியம் இருக்காது.
பண்டிகையன்று அறுசுவை உணவும், இனிப்புகளும் உண்பதால், நம் மனம் மட்டும் திருப்தியடையும். இதையே அனாதை ஆசிரமத்தில் உள்ளவர்களின் ஒரு வேளை உணவிற்கு செலவு செய்தால், பலரது வயிறும், மனமும்
திருப்தியடையும்.
பண்டிகையன்று புதிய ஆடை அணிவதற்கு முன், மஞ்சள் வைத்து பின் உடுத்துகிறோம். ஆண்களின் ஆடைகளில், அந்த மஞ்சளை, சட்டைக் காலரின் உட்பக்கம் உள்ள பிராண்ட் லேபிளில் வைத்தால், மஞ்சள் வைத்த இடம் வெளியே தெரியாது.
தீபாவளி முடிந்ததும் நம் வீட்டில் மொட்டை மாடிகளில் நிறைய எரிந்த ராக்கெட்டுகள் மற்றும் ஊசிப் பட்டாசுகள் வந்து விழுந்திருக்கும். இவையும் மழை நீர் சேகரிப்புக்குரிய பைப்புகளில் சென்று அடைக்க வாய்ப்புள்ளதால், அந்த இடத்தை உடனே சுத்தம் செய்ய வேண்டும்.
தீபாவளியன்று பூஜைக்கான தேங்காய், பூ, பழம் வெற்றிலை மற்றும் அதற்கான சாமான்கள், நாம் உடுத்தப் போகும் புத்தாடைகள் ஆகியவற்றை, முதல் நாளே எடுத்துத் தயாராக வைத்திருந்தால், அதிகாலையில் நமக்கு டென்ஷன் இருக்காது.
அடுப்பில் பட்சணம் செய்யும் போது, கையில் சூடு எண்ணெய் பட்டு விட்டால், உடனே இட்லி மாவில் சிறிது எடுத்து அந்த இடத்தில் தடவினால், குணம் தெரியும்.
தீக்காயம்… முதலுதவி…
தீக்காயத்தின் மீது இங்க், எண்ணெய் போன்றவற்றை ஊற்றாதீர்கள்.
தீப்புண் ஏற்பட்டால், உடனடியாக காயத்தில் நீரை ஊற்றுங்கள்.
தீப்புண் ஏற்பட்ட பகுதியை மெல்லிய துணியால் மூடி, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.தீக்காயத்தை அழுத்தித் துடைக்காதீர்கள்.
தீப்புண்ணில் ஒட்டியுள்ள ஆடைகளை அகற்றாதீர்கள்.
தீப்புண்ணில் எண்ணெய், ஆயின்மென்ட், இங்க் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
ஆடையில் தீ பற்றிக் கொண்டால், ஓடாதீர்கள்; படுத்து உருளுங்கள்.
தண்ணீரை ஊற்றி அணையுங்கள் அல்லது போர்வையால் மூடி தீயை அணையுங்கள்.