Monday 31 October 2011

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்

காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம்.
ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.
நமது கலாச்சாரத்தின் படி, இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம், இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது. தாம்பத்யத்தின் வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
கணவன் - மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது. இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் - மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?
அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை.
அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல் தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன. எதிர் வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை.
ஆனால் இப்போதெல்லாம், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை. அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும் வழக்கமாகிவிட்டது. குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது.
அதுபோன்றதொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள் உணர்வதில்லை. காலத்தின் சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை.
இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன் அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும் சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும். கணவன் - மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும், மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு - பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம் சாதாரணம்.
இதனால் கிடைப்பது என்ன? மிடுக்கான வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி, வெளிநாடுகளுக்கு பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, நினைத்தப் பொருள் நினைத்தவுடன் கையில் என அனைத்தும் கிடைக்கும். ஆனால்... இதுதான் வாழ்க்கையா? இதில் மனம் நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?
தாம்பத்ய வாழ்க்கை! இதற்கெல்லாம் தாம்பத்யம் ஈடாகுமா? ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் தாம்பத்யம் தற்போது குறைந்து வருகிறது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதற்கும், பல திருமணங்களின் உடனடி முறிவிற்கும் முக்கிய காரணமாக இந்த தாம்பத்யமே மையமாக அமைகிறது.
வாழ்க்கையில் முன்னேறவும், முக்கிய இடத்தை பிடிக்கவும் மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த மனதிற்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கும் தாம்பத்தியத்தை பலர் மறந்தேவிட்டனர். "நேரம் இல்லை அதனால் செக்ஸ் இல்லை" என்பதே தற்போது பலர் சொல்லும் மந்திரமாகிவிட்டது.
மேலும் சில தம்பதிகளிடையே காலையில் எழுவதும், பணிக்கு செல்வதும், குழந்தைகளை பராமரிப்பதும் போல் தாம்பத்யமும் ஒரு பணியாக, அதனை கடமையாக எண்ணும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலையில் இருந்து நாம் சந்திக்கும் பிரச்சினைகளும், பணிச் சுமையுமே ஆகும்.
இதுபோல் பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச் சிறையில் வாழ்பவர்கள்' என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில் இருந்து விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து விடுகின்றனர். இதனால் இவர்களது திறமை வெளிப்பட்டு பெயர், புகழ் கிடைத்தாலும், உள்மனது அதற்கெல்லாம் மகிழ்ச்சியடைவதில்லை.
அது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல பல சமயங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை. பணமும், புகழும், தங்களை சார்ந்தவர்களையும், தங்களது தேவைகளையும் திருப்திப்படுத்துமே தவிர, மனதையும், அதன் உணர்வுகளையும் அல்ல. பணத்தால் மனதை நிறைவு செய்ய இயலாது.
பணம் தான் வாழ்க்கை என ஓடும் பலர் சிறிது நேரம் நின்று பார்த்தால் தெரியும், எவ்வளவோ பேர் பணம் கிடைத்தும் நிம்மதி இல்லாமல் நிம்மதியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதை. பலர் தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுடனே வீட்டிக்குள் நுழைகின்றனர். இது தவிர்க்க முடியாததே ஆனாலும், தள்ளி வைக்க வேண்டிய விஷயமாகிறது.
இதுபோன்று பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும், காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்கள் அறியாமலேயே அவர்களது தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
தங்களது நிறைகுறைகளை, இன்ப துன்பங்களை, கோபதாபங்களை தனது துணையுடன் பகிர்ந்து கொண்டு, அதற்காக நேரம் ஒதுக்குவதும் தான் நல்ல தாம்பத்தியம். நல்ல தாம்பத்யம் என்பதே இல்லற வாழ்வின் இனிய வாசற்படி. அதற்குள் நுழைந்தால்தான் குழந்தைகள், செல்வம் என்னும் வீட்டிற்குள் வாழ இயலும். மனித வாழ்க்கைக்கு ஆதாரமான தாம்பத்தியத்தை தொலைத்து விட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?