Thursday 13 October 2011

காதுகளை பாதுகாக்கும் வழிகள்

அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்க கேட்க காது கண்டிப்பாக பாதிக்கப்படத்தான் செய்யும். எந்த நோயும் வராமல் வெறும் அதிக சத்தத்தால் மட்டுமே காது கேட்காமல் போகிறதென்றால் அது ஜீரணிக்கக் கூடிய விஷயமா?
தனக்கு காது சரியாக கேட்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்வதை விட தனது குழந்தைகளுக்கு சரியாக காது கேட்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
பிறந்த குழந்தைக்கு காது சரியாக கேட்கிறதா, இல்லையா என்பதை வீட்டிலுள்ள பெரியவர்கள் ஒரு சில விஷயங்களை வைத்தே சரியாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் குழந்தை அழும்போது பால் கொடுப்பதற்காக பால் பாட்டில் மற்றும் அதைச் சேர்ந்த பாத்திரங்களை உருட்டும்போது ஏற்படும் சத்தம் வரும் திசையை நோக்கி குழந்தை தனது தலையைத் திருப்பும். இதை வைத்து குழந்தைக்கு காது கேட்கிறது என்று பெற்றோர்கள் சந்தோஷப்படுவார்கள்.
இப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தைக்கு கூட காது கேட்கிறதா? இல்லையா என்பதை “ஆட்டோ அக்கவுஸ்டிக் எமிஷன்” என்கிற பரிசோதனையின் மூலம் சரியாகக் கண்டுபிடித்து விடலாம்.
தொழில் சார்ந்த நோய்களில் முதன்மையானது காது கேட்காமல் போவதுதான். அதிக சத்தம் வரும் தொழிற்சாலைகளில் பணி புரிந்து அறுபது வயதைத் தாண்டிய சுமார் 70 சதவீதம் பேருக்கு காது கேட்கும்திறன் மிகவும் குறைந்து விட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பாக அதிக சத்தம் வரும் இடங்களில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், வருடா வருடம் கண்டிப்பாக அருகிலுள்ள காது மூக்கு தொண்டை டாக்டரைச் சந்தித்து ஆடியோகிராம் டெஸ்ட்டை பண்ணி தனக்கு காது கேட்கும் திறன் எப்படியிருக்கிறது? போன வருடத்தைவிட இந்த வருடம் குறைந்திருக்கிறதா அல்லது அப்படியே இருக்கிறதா?
ஒரு வேளை காது கேட்கும் திறன் குறைவதாக தெரிந்தால் நிர்வாகத்தின் அனுமதியுடன் வேறு பிரிவுக்கு மாற்றுதல் வாங்கி வேலை செய்வது நல்லது.
காது கேட்காததால் ஹியரிங் எய்டு கருவியை ஏற்கனவே மாட்டிக் கொண்டிருப்பவர்கள் வருடாவருடம் ஆடியோகிராம் டெஸ்ட் பண்ணி காது கேட்கும் திறன் குறைந்திருக்கிறதா, இல்லையா என்பதை அவசியம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கம்பெனி முதலாளி தனது கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் காது கேட்கும் திறனைப் பற்றியும், அதிக அளவில் சத்தத்தை கேட்டால் காது என்னாகும் என்பதைப் பற்றியும், அதிக சத்தத்திலிருந்து காதை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதைப் பற்றியும் தொழிலாளிகளின் மாதாந்திரக் கூட்டத்தில் விளக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த விளக்கம் தொழிலாளிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் நாம் அதிக சத்தத்தை உண்டு பண்ணக் கூடாது என்ற அக்கறை வரவேண்டும். அது இல்லாவிட்டால் இந்த அதிக சத்தத்தினால் வரும் பாதிப்பை தடுக்க முடியாது. நமக்கென்ன, நமக்கென்ன என்று ஒவ்வொருவரும் நினைத்துக்கொண்டு தட்டிக் கழிக்கவே கூடாது.
எட்டு மணி நேரத்திற்கு மேலே ஒருவர் தொடர்ந்து அதிக சத்தம் வரக்கூடிய ஒரே இடத்தில் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த தொழிற்சாலையில் சுமார் 85 டெஸிபல் அளவு சத்தம் தொடர்ந்து இருந்தால் அந்த நபர் கண்டிப்பாக காதில் ஒலி அடைப்பான் மாட்டிக் கொண்டுதான் வேலை பார்க்க வேண்டும்.

ஆனால் அந்த தொழிற்சாலையில் 85 டெஸிபல் அளவுக்கு குறைவான சத்தம் இருந்தால் காதில் ஒலி அடைப்பான் மாட்ட வேண்டிய தேவையில்லை. இசைத்துறையில் இருப்பவர்களுக்கும், ரெக்கார்டிங் துறையில் இருப்பவர்களுக்கும் அதிக சத்தத்தினால், காது பாதிக்கப்படுவதுண்டு.
குறிப்பாக ராக் இசைப் பாடகர்கள் அநேகம் பேருக்கு அதிகமான இசையை தினமும் கேட்டு, காது பாதிப்பு ஏற்படுவதுண்டு. டிஸ்கோ நேரடி இசைக்கச்சேரி ஆகியவைகள் இளைஞர்களின் காது கேட்கும் திறனை மிகவும் பாதிக்கச் செய்கிறது என சமீப கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ரோட்டில் இருந்துதான் அதிக சத்தமே வருகிறது.
அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் ரோட்டில் ஏற்படும் அதிக சத்தத்தை குறைக்க சவுண்ட் டியூப் என்று அழைக்கக்கூடிய ஒரு ஸ்பெஷல் குழாய் உபகரணங்களை ரோட்டின் மேல்பகுதியில் வாகனங்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாத வகையில் கூரை போன்று அமைத்து மாட்டியிருக்கிறார்கள்.
இந்தக் குழாய்கள் ரோட்டில் ஏற்படும் அதிக சத்தத்தை ஓரளவு குறைக்குமாம். வாகனங்களின் வேகத்தை குறைத்தல், ரோட்டின் மேல்பகுதியை அதிக சத்தம் வராதவாறு மாற்றுதல், கனரக வாகனங்கள் செல்வதை குறைத்தல், நிறைய இடங்களில் டிராபிக் சிக்னல்களை ஏற்படுத்தி வாகனங்களை ஒரே சீரான வேகத்தில் செல்ல வைத்தல், அதிக சத்தம் வராதவாறு டயர்களை வடிவமைத்தல் போன்ற பல மாற்றங்களை செய்து ரோட்டில் ஏற்படும் அதிக சத்தத்தை குறைக்கப் பார்க்கலாம்.
காரில் தற்போது லேட்டஸ்ட்டாகப் பொருத்தப்படும் ஹாரன் அதிக சத்தத்தை உண்டு பண்ணும், காதைப்பிளக்கும் புதுரக பட்டாசுகள், அதிக சத்தத்தை உண்டு பண்ணும், இசைக் கருவிகள் இவைகளையெல்லாம் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் பொது இடங்களில் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து அதை அமுல்படுத்தவும் வேண்டும்.
முதலில் அதிகமாக கத்திப் பேசுவதை நாம் குறைக்க வேண்டும். கத்திக்கத்திப் பேசுவதால் தொண்டை உலர்ந்துபோகும். தேவையில்லாமல் உடலின் சக்தி வீணாகும். டென்ஷன் உண்டாகும். ரத்த அழுத்தம் கூடும். இப்படியே தொடர்ந்தால் நிரந்தர அதிக ரத்த அழுத்த நோயாளி ஆகிவிடுவீர்கள் இது தேவையா? என்று யோசித்துப் பாருங்கள்.
வீட்டுக்குள்ளேயே தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் கத்திப்பேசுவது, டி.வி.யில் அளவுக்கதிகமாக சத்தம் வைத்துக் கேட்பது, ஸ்டீரியோ மியூசிக் அதிக சத்தம் வைத்துக் கேட்பது, அதிக வாகனப் போக்குவரத்து உள்ள ரோட்டில் இரைச்சல்களுக்கு இடையில் நின்று தேவையில்லாமல் காரில், பஸ்ஸில் ஹாரன் அடிப்பது, வாகனங்களை சரிவர பராமரிக்காததால் அவை அதிக இரைச்சலை ஏற்படுத்துவது மேற்கூறிய இவையெல்லாமே தேவை இல்லாத சத்தம் தானே.
அதிக சத்தத்தைக் கேட்காமல் அதிக சத்தத்தை உண்டு பண்ணாமல் காதைப் பாதுகாக்கலாமே.