இருளை விரட்டும் ஒளியை நாம் விளக்கு ஏற்றும்போது பெறுகிறோம். அதுபோல், நம் இருளாகிய துன்பம் அகன்று, வெளிச்சமாகிய இன்பம் பரவ நாம் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும்.""தீபஜ்யோதி பரப்ரஹ்ம தீப சர்வ தமோபஹ:தீபேன சாத்யதே சரம் சந்த்யா தீபோ நமோஸ்துதே''-காலை, மாலை என இரு வேளைகளிலும் நான் ஏற்றும் இந்த தீபத்தால், பேரொளியை வணங்குகிறேன். அது என் அறியாமை இருளை அகற்றி, வாழ்வில் அனைத்தையும் அடைவதற்கு எனக்கு வழிகாட்டட்டும் என்பது இதன் பொருள். இந்தப் பிரார்த்தனையை நாம் ஒட்டிப் பார்த்தால், நம் பண்டைய மரபில் அறிவை அறிவுச் சுடர் என்று விளக்குக்கு ஒப்பிடுவர். அதுபோல், பிரகாசிக்கும் சூரிய ஒளிக்கும் ஒப்பிடுவதுண்டு. காரணம் இருள் அகற்ற ஒளி பயன்படுகிறது. அதுபோல், அறியாமையை அகற்ற அறிவு தேவைப்படுகிறது.தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சியில்,""கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான், கனவிருள்அகன்றது காலையம்பொழுதாய்'' என்கிறார்.மகாகவி பாரதியார் தம் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியில்...""பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்புன்மையிருட்கனம் போயின யாவும்எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவிஎழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி...''- என்று, அறிவை சூரியனுக்கு ஒப்பிடுகிறார்.இந்தப் பிரார்த்தனையின் மூலம் இருள் அகற்றி அறிவு ஒளி பெறுவோம்.