Wednesday, 12 October 2011

காற்று மாசுபாட்டால் சிசு வளர்ச்சி பாதிப்படையும்:

 
உலகம் முழுவதும் பெருகிவரும் வாகன போக்குவரத்தால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
இதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகிறது. சூற்றுச்சூழல், தண்ணீர், காற்று உள்ளிட்ட மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காற்று மாசுபாடு கர்ப்பத்தில் உள்ள சிசுவையும் பாதிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாதிப்பால் சிசு வளர்ச்சி தடைபடுமாம்.
2000 முதல் 2006ம் ஆண்டு வரை அதிக போக்குவரத்து உள்ள பகுதிகள், போக்குவரத்து மிதமாக உள்ள பகுதிகள் என பல இடங்களில் இருந்து சுமார் ஆயிரம் கர்ப்பிணிகள் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.
இதில் அதிக போக்குவரத்து இருந்த பகுதிகளில் வசித்த கர்ப்பிணிகளுக்கு குறைந்த எடையிலேயே குழந்தைகள் பிறந்தது. சிசு வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடு இது.
ஆய்வுத் தகவல் வருமாறு: காற்றில் கார்பன் மோனாக்சைடின் அளவு அதிகரிக்கும் போது காற்று மாசுபடுகிறது. இந்த மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்படும் அபாயங்களும் உள்ளன.
குறிப்பாக கர்ப்பிணிகள் இத்தகைய காற்றை சுவாசிப்பதால் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சி தடைபடும். இதனால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பது கேள்விக்குறியாகும். இத்தகைய குழந்தைகள் பிறக்கும்போது மற்ற குழந்தைகளைவிட சுமார் 58 கிராம் எடை குறைவாக உள்ளனர்.
வளர்ச்சியும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. எனவே இத்தகைய பகுதிகளில் வசிக்கும் தாய்மார்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பகாலத்தில் மாற்று இடங்களுக்கு மாறலாம். அதனால் தாய், சேய் நலம் பாதுகாக்கப்படும்.