Tuesday, 11 October 2011

ஏர்செல்

 
ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசிய நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்க நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக கூறப்படும் புகாரை தொடர்ந்து மாஜி தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சன் டிவி அலுவலகம், டெல்லி, ஐதராபாத்தில் உள்ள மாறன் சகோதரர்களின் அலுவலகங்களிலும் இந்த சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்றது.
.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருடன் மேக்சிஸ் அதிபர் அனந்த கிருஷ்ணன், அஸ்ட்ரோ தலைமை நிர்வாக அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன அதிபராக இருந்த சிவசங்கரன் தனது செல்போன்
சேவையை விரிவாக்க 2ஜி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு லைசென்ஸ் தராமல் தயாநிதி மாறன் தாமதப்படுத்தி வந்தார்.

அவரது பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு நிர்ப்பந்தித்தார். இதையடுத்து வேறு வழியின்றி தனது நிறுவன பங்குகளை சிவசங்கரன் குறைந்த விலைக்கு மலேசியாவை சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதாக சிபிஐயிடம் சிவசங்கரன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஏர்செல் நிறுவனம் கைமாறிய பிறகு சன் டிவியின் டிடிஎச் சேவையில் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ரூ.600 கோடியை முதலீடு செய்தது. இது 2ஜி லைசென்சுக்காக மேக்சிஸ் நிறுவனம் அளித்த லஞ்சம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தார்கள். தயாநிதி மாறனின் உத்தரவால்தான் சிவசங்கரனுக்கு லைசென்ஸ் வழங்குவது தாமதம் செய்யப்பட்டதாக அவருடைய உதவியாளர்கள் சிபிஐ அதிகாரியிடம் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தயாநிதி மாறன், அவருடைய சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவன அதிபர் டி.ஆனந்தகிருஷ்ணன், அதன் தலைமை செயல் அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்கள்.

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு13 (2), ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு13 (1) (ஈ), ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு12 மற்றும் சதி செயல் 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று சிபிஐ அதிகாரிகள் சென்னை, ஐதராபாத், புதுடெல்லி ஆகிய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டார்கள். இன்று காலை 8 மணிக்கு போட் கிளப்பில் உள்ள தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரின் வீடு, சன் டிவி அலுவலகம், அவர்களின் ஐதராபாத், டெல்லி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இது தவிர மாறன் சகோதரர்களுக்கு மிக நெருக்கமான சிலரின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அப்பல்லோ மருத்துவமனை சுனிதா ரெட்டியின் இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் மீது சிபிஐ விசாரணை வராமல் தடுப்பதற்காக மாறன் சகோதரர்கள் புதுடெல்லியில் முகாமிட்டு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் முயற்சி பலனளிக்காமல் நேற்று சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதை அறிந்ததும் தங்கள் சொந்த விமானத்தில் இன்று காலை புதுடெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்தார்கள்.

தங்கள் வீட்டிலும், அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவதை அறிந்ததும் புதுடெல்லியில் இருந்து அவர்கள் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றார்கள். பெங்களூரில் அவர்களின் சித்தியும், முதல்வரின் கருணாநிதியின் மகளுமான செல்வியின் வீடு இருக்கிறது. எனவே அவர்கள் செல்வியின் வீட்டுக்கு சென்றார்கள்.

செல்வி தனது தந்தையிடம் இது பற்றி எடுத்து கூறி, மத்திய அரசை நடவடிக்கையை கைவிடும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து டி.ஆர்.பாலு இன்று காலை விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.