Monday, 10 October 2011

ஒல்லிக்குச்சி உடம்புக்கு காரணம் என்ன?



`நானும் எல்லாரையும் போலத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் ஒல்லிக்குச்சியாவே இருக்கிறேன்' என்று சிலர் அலுத்துக் கொள்வதுண்டு.
நன்றாக சாப்பிட்டால்தான் திடகாத்திரமான உடல்வாகு பெற முடியும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், நன்றாக சாப்பிட்டாலும்கூட சிலர் மட்டும் ஏன் எப்போதும் ஒல்லிப்பிச்சானாகவே இருக்கிறார்கள் என்பது இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே உள்ளது!
ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒருவர் அநியாயத்துக்கு ஒல்லியாய் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய மரபணுக்களில் ஒளிந்திருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார் இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் இம்பீரியல் காலேஜின் ஆய்வாளரான ஃபிலிப் ஃப்ராகெல்.
இவருடைய ஆய்வின்மூலம், ஒருவரின் உயிரணுக்களில் உள்ள குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர் மிகவும் ஒல்லிப்பிச்சானாகவே இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.
ஆக, 2000 பேரில் ஒருவருக்கு குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதால், உலக ஆண்கள் 23 சதவீதமும், பெண்கள் 5 சதவீதம் பேரும் குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆமாம், ஏன் சில மரபணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன?
பொதுவாக, நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போது நம் தாய் மற்றும் தந்தையிடமிருந்து 23+23 குரோமோசோம்களை பெறுகிறோம். ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறிலிருந்து ஆயிரம் மரபணுக்கள் இருக்கும்.
ஆக, ஒன்று தாயிடமிருந்து, மற்றொன்று தந்தையிடமிருந்து பெறுவதால், நம் உயிரணுக்களில் உள்ள ஒவ்வொரு மரபணுவும் இரண்டு என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஒரு குரோமோசோமின் சில பகுதிகள் இரட்டிப்பாகவும், சிதைந்து துண்டிக்கப் பட்டு விடும் வாய்ப்புகள் இருப்பதால், நம் மரபணு எண்ணிக்கை இயல்புக்கு மாறாக அதிகமாக அல்லது குறைந்து போகலாம்.
லண்டன் இம்பீரியல் காலேஜில், சுமார் 95 ஆயிரம் மக்களை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உடல் எடை அளவீட்டு எண்ணான 18.5 அளவின் அடிப்படையில், குறைந்த எடை உள்ளவர்களின் உடலில் குரோமோசோம் 16ன் ஒரு பகுதி இரட்டிப்படைந்திருந்தது கண்டறியப்பட்டது.
இந்த குரோமோசோம் 16ல் இரட்டிப்புடைய குழந்தைகளில் பாதி பேருக்கு உடல் எடையை அதிகரிப்பதில் குறை பாடு இருந்தது. கால்பங்கு குழந்தைகளுக்கு மிகவும்
சிறிய தலை, மூளையும் அதனால் ஏற்படும் நரம்புக்கோளாறுகள் காணப்பட்டது. மேலும் குறைந்த ஆயுட்காலத்துக்கும் காரணமான `மைக்ரோசெபாலி' என்னும் மருத்துவ குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
முக்கியமாக, இதே ஆய்வாளர்கள் கடந்த வருடம் நடத்திய ஆய்வில், குரோமோசோம் 16லுள்ள குறிப்பிட்ட மரபணுக்கள் (உயிரணுக்களில்) இல்லாமல் இருந்தவர்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வாளர் ஃபிலிப் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், பொதுவான நம்பிக்கையின்படி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மரபணுவும் இரண்டாக இருக்க வேண்டும். ஆனால், நமது மரபுச்சுருளில் மரபணுக்கள் தொலைந்துபோவதால் ஏற்படும் பல ஓட்டைகளும், வேறு சில பகுதிகளில் குறிப்பிட்ட சில மரபணுக்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதுமே நிதர்சனம் என்றும், பல சமயங்களில் இம்மாற்றங்களால் பாதிப்புகள் இல்லை என்றாலும் சில சமயங்களில் இம்மாற்றங்கள் நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்.

இதுவரையிலான ஆய்வுகளில் உடல் பருமனுக்கான மரபியல் காரணங்களே பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் முதல் முறையாக இந்த புதிய ஆய்வில் ஒரு குழந்தை நன்றாக உண்டு, எடைகூடி வளர்வதற்கும் மரபியல் காரணங்களே அடிப்படை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் மாற்றமடையக்கூடிய குரோமோசோம் 16ன் குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஜீன்கள்/மரபணுக்கள் குறித்து ஒன்றும் கண்டறியப்படவில்லை.
ஆனால், இது குறித்த கூடுதல் ஆய்வுகளில் குறிப்பிட்ட மரபணுக்கள் மற்றும் மெலிந்த உடலுக்கான காரணங்கள் கண்டறியப்படும்போது, பசியின்மை, உணவு உண்பதில் கோளாறு மற்றும் உடல் பருமன் போன்ற உபாதைகளுக்கான புதிய சிகிச்சைகள் சாத்தியப்படும் என்கிறார் பிலிப் ப்ராகெல்.