Tuesday 4 October 2011

டேப்ளட் கணணிகள் தரும் புத்தம் புதிய வசதிகள்



பெர்சனல் கணணியின் இடத்தை விரைவில் பிடித்துவிடும் என அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு சாதனம் டேப்ளட் பிசி. இன்று இது ஒரு புதிய சாதனம் அல்ல.
கைகளில் எடுத்துச் சென்று எங்கும் பயன்படுத்தக் கூடிய மிகச் சிறந்த சாதனமாக டேப்ளட் பிசி உருவாகியுள்ளது. நமக்குப் பிடித்த செய்தி சேனல்களைப் பார்க்கலாம், பிரியமான திரைப்படங்களைப் பார்க்கலாம், மின்னஞ்சல்களைப் பார்க்கலாம், அனுப்பலாம், கேம்ஸ் விளையாடலாம், இசையை ரசிக்கலாம்.
இப்படி இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டிய அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். முதலில் வெளியான டேப்ளட் கணணிகள் பயன்படுத்த மிகவும் கடினமாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருந்தன.
ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் பற்றரிகள் தங்கள் மின் சக்தியை இழந்தன. அதனால் லேப்டாப் கணணியே போதும் என்று மக்கள் அவ்வளவாக இதன் மீது அக்கறை காட்டாமல் இருந்தனர்.
தற்போது இதன் அனைத்து குறைகளும் களையப்பட்டு சிறப்பான பயன்பாட்டினைத் தரும் பல அம்சங்களை இவை கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள சில அனுகூலங்களை இங்கு காணலாம்.
1. டேப்ளட் பிசி என்பது முழுமையான ஒரு பெர்சனல் கணணி என்று சொல்லலாம். இன்றைக்கு கணணி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை இன்டர்நெட் பிரவுஸ் செய்திடவும், வீடியோ மற்றும் ஓடியோ ரசிக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த செயல்களை பெர்சனல் கணணிகளில் மேற்கொள்கையில் கட்டாயமாக அதன் முன் அமர்ந்து தான் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு டேப்ளட் கணணியில் நமக்கு வசதியான இடத்தில் நின்று கொண்டோ, படுத்துக் கொண்டோ, அமர்ந்தோ, சுகவாசியாக டேப்ளட் பிசியைப் பயன்படுத்தலாம்.
2. டேப்ளட் பிசியைக் கையாள்வது மிக இயற்கையான ஒரு செயலாக உள்ளது. குறிப்பாக அதன் தொடுதிரையைத் தொட்டுச் செயல்படுவது, மவுஸினைக் கையாள்வதனைக் காட்டிலும் எளிதாகவும், இயற்கையாகவும் உள்ளது. மேலும் டேப்ளட் பிசியைப் பயன்படுத்த, சிறப்பாக எந்த பயிற்சியும் தேவையில்லை. ஒரு குழந்தை கூட எளிதாக இதனைப் பயன்படுத்த முடியும்.
3. டேப்ளட் பிசி மிகவும் வேகமாகச் செயல்படுகிறது. இன்டர்நெட் பிரவுஸ் செய்வதில் இதன் வேகம் பெர்சனல் கணணியையும் மிஞ்சி விடுகிறது.
4. நண்பர்களுடன் வீடியோ சேட் செயல்களில் ஈடுபடுவது, பெர்சனல் கணணிகளில் முடியும் என்றாலும் ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்வது இன்னும் இயற்கையாக ஒரு நெருக்கத்தினை நண்பர்களுடன் ஏற்படுத்துகிறது.
5. ஒரு டேப்ளட் பிசியில் ஆயிரக்கணக்கான மின் நூல் பக்கங்களை சேவ் செய்து நாம் விருப்பப்படும் நேரத்தில் படிக்க இயலும். தனியாக இதற்கென ஒரு இ–ரீடர் என்னும் சாதனத்தினை வாங்க வேண்டியதில்லை.
6. டேப்ளட் பிசியை எந்த ஒரு சாதனமாகவும் இயக்க பல அப்ளிகேஷன்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதற்கென அப்ளிகேஷன் ஸ்டோர்கள் இணையத்தில் நிறைய இயங்குகின்றன. கமெரா, நூல்கள், மியூசிக் பிளேயர், பருவ இதழ்கள் எனப் பல வசதிகள் கிடைக்கின்றன.
7. பெர்சனல் கணணி பயன்படுத்துவதில் மொனிட்டர் மூலம் நம் கண்களுக்கு ஏற்படும் இடையூறுகள், ஒரு டேப்ளட் பிசியைப் பயன்படுத்துகையில் அறவே நீக்கப்படுகின்றன. இதனை எந்தக் கோணத்திலும் வைத்துப் பயன்படுத்தலாம். நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் கூட இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
8. டேப்ளட் பிசிக்கள் வந்த புதிதில், ஒரு பெர்சனல் கணணி விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. இப்போது பல நிறுவனங்கள் இந்த சந்தையில் இயங்குவதால் இவற்றின் விலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒரு பெர்சனல் மற்றும் லேப்டாப் கணணியைக் காட்டிலும் குறைவான விலையில் இதனை வாங்கிப் பயன்படுத்த முடியும்.