வேர்ட் தொகுப்பில் பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர் நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம்.
இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும் வாக்கியங்கள் கொண்ட தொகுப்பினை அமைத்திடுவோம்.
ஆனால் டாகுமெண்ட் ஒன்றில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் உண்டு என்பதனைப் பலர் அறியாமல் இருப்பீர்கள்.
கிளிக் அன்ட் டைப்(Click and Type) என்ற இந்த வசதி வேர்ட் 2000 முதல் தரப்பட்டுள்ளது. இந்த வசதி பிரிண்ட் லே அவுட் மற்றும் வெப் லே அவுட்(Print Layout view or Web Layout) ஆகிய வியூவில் டாகுமெண்ட்டைப் பயன்படுத்து கையில் கிடைக்கும்.
இந்த வசதியின்படி மவுஸ் கர்சரை நீங்கள் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்தால் கர்சர் அங்கு அமைக்கப்பட்டு டைப் செய்யப்படும் சொற்கள், வரிகள் அங்கிருந்து தொடங்கப்படும். இதன் மூலம் போர்மட்டிங் பணியினைச் சற்று வேகமாக மேற்கொள்ளலாம்.
இந்த வசதி நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பில் இயக்கத்தில் உள்ளதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? டாகுமெண்ட்டில் மவுஸ் கர்சர் ஒரு(I) டி பீம் போலக் காட்சி அளிக்கும். அதாவது ஆங்கில “I” எழுத்தின் மேல் கீழாக சிறிய கோடு இருப்பது போலத் தோன்றும்.
இதன் அருகே வலது பக்கத்தில் சில படுக்கை வசத்திலான சிறிய கோடுகள் இருந்தால் இந்த வசதி உங்கள் வேர்டில் இயக்கத்தில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இந்த கோடுகள் நீங்கள் எந்த இடத்திலும் வரிகளை இணைக்கலாம் என்று காட்டுகின்றன.
இவ்வாறு வரிகளை நினைத்த இடத்தில் அமைக்கையில் அந்த வரிகள் எந்த வகையில் அமையும் என்பதை இந்த i பீம் அருகே உள்ள சிறிய கோடுகள் காட்டுகின்றன. இதில் நான்கு வகைகள் உள்ளன.
அந்த படுக்கை வரிகள், i பீம் அருகே மேல் வலது புறமாக அமைந்திருந்தால் மவுஸை இருமுறை கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா, இடது வாகாக அலைன் செய்து அமைக்கப்படும்.
அந்த வரிகள் மேல் வலது புறமாக அமைந்து முதல் படுக்கை வரியின் இடது புறம் ஒரு சிறிய அம்புக் குறி இருந்தால் நாம் அமைக்கும் வரிகள் கொண்ட பாராவின் முதல் வரி, அதற்கான பாரா இடைவெளியுடன் அமைக்கப்படும்.
இந்த வரிகள் i பீம் நேர் கீழாக இருந்தால் நாம் இருமுறை மவுஸ் கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா நடுவாக அமையும்.
இதே வரிகள் i பீம் இடது மேல் புறமாக அமைக்கப்பட்டால்நாம் இருமுறை மவுஸ் கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா, வலது பக்கம் அலைன் செய்யப்பட்டு அமையும்.
இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வசதி அமைக்கப்படும் டாகுமெண்ட்டிற்கான வியூ, பிரிண்ட் லே அவுட் அல்லது வெப் லே அவுட் என்ற முறையில் இருந்தாலே இந்த வசதி கிடைக்கும்.
எனக்கு இந்த வசதி எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவரா நீங்கள். இதனை நீக்கும் வழியும் இங்கு உண்டு. நீங்கள் வேர்ட் 2000, 2002 அல்லது 2003 பயன்படுத்துபவராக இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவில் இருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் எடிட் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு Enable Click and Type என்ற செக் பாக்ஸ் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விட்டால் இந்த வசதி இயக்கப்பட மாட்டாது.
4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Office பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. டயலாக் பாக்ஸின் இடப்பக்கத்தில், Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. டயலாக் பாக்ஸின் எடிட்டிங் பகுதியில் உள்ள Enable Click and Type என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.